WHAT IS THE DIFFERENCE BETWEEN THE MIND AND THE BRAIN?
பலருக்கும் மனது என்றால் என்ன? புத்தி என்றால் என்ன? என்பது தெரியவில்லை. மனது என்பது எப்பொழுதும் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது. அது ஒவ்வொரு விஷயத்திலும் பிடிக்கும், பிடிக்காது என்பதை நமக்குக் கூறும். புத்தி என்பது நல்லது, கெட்டது எது என்பதை நமக்கு உணர்த்தும்.
உதாரணமாக ஒரு கார் வாங்குவதற்காக நீங்கள் ஒரு இடத்திற்குச் செல்கிறீர்கள். அங்கே 50 விதமான கார்களை வரிசையாக நிறுத்தியிருக்கிறார்கள். நீங்கள் தூரமாக இருந்து 50 காரையும் உங்கள் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது உங்கள் மனது அந்த 50 காரில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கார்களில் மட்டுமே கவனம் செலுத்தும். நமது மனது இந்த 50 காரில் எந்தக் கார் பிடித்திருக்கின்றது. எந்தக் கார் பிடிக்கவில்லை என உடனடியாக நமக்கு தெரியப்படுத்தும். இந்த மனதிற்கு அந்தக் காரில் எத்தனை பேர் பயணம் செய்யலாம். நாம்மால் வாங்க முடியுமா? அதன் விலை என்ன? பெட்ரோல் மூலமாக ஓடுகிறதா? டீசல் மூலமாக ஓடுகிறதா? என்பதெல்லாம் பற்றிக் கவலைப்படவே படாது. மனது எனக்குப் பிடித்திருகிறது பிடிக்கவில்லை என்பது மட்டுமே நமக்குத் தெளிவாக உணர்த்தும்.
ஆனால் புத்தி என்பது அந்தக் கார் அலுவலகத்திற்குச் சென்று ஒவ்வொரு காரைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு எந்தெந்தக் காரின் விலை எவ்வளவு? எதற்கு லோன் கிடைக்கும். கிடைக்காது. இது நம் வீட்டிலுள்ள அனைத்து நபர்களுக்கும் பொருந்துமா? அலுவலகத்திற்கும் பொருந்துமா, நமது வீட்டில் நிறுத்த முடியுமா போன்ற பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து போன் செய்து சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டு இரண்டு மூன்று நாள் அல்லது ஒரு வாரத்திற்குப்பிறகு நமது புத்தி ஒரு முடிவுக்கு வரும். இந்த 50 காரில் இந்தக் கார் தான் இருப்பதிலேயே நல்லது. இதை நாம் வாங்கலாம் என்று கூறும்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனதிற்குப் பிடித்த காருக்கும், புத்தி நல்லது என்ற காருக்கும் சம்பந்தமே இருக்காது. இதேபோல் ஒவ்வொரு விஷயத்திலும் நம் மனது ஒரு முடிவையும், புத்தி ஒரு முடிவையும் எடுக்கிறது. ஒரு உணவுக்கடையில் சென்று அமரும் பொழுது நமது மனது கொத்து புரோட்டா சாப்பிடுவதற்கு ஆசைப்படுகிறது. ஆனால் அதைச் சாப்பிட்டால் வயிறு வலிக்கும் என்று வேறு உணவை நல்லது என்று புத்தி கூறுகிறது. இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு இடத்திலும் புத்தியும், மனதும் வேறு வேறு முடிவை எடுக்கிறது என்று நாம் தடுமாறுகிறோம். உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் உள்ள குழப்பத்திற்கு காரணம் மனதிற்குப் பிடித்ததைச் செய்வதா? அல்லது நல்லதைச் செய்வதா? இந்தக் குழப்பம் தான் மனதின் அமைதியின் மிகப் பெரிய எதிரி. இதைப் புரிந்து கொண்டால் நம் மனதில் அமைதி என்றும் இருக்கும்.'
புத்தியும், மனதும் தனித்தனியாக வேலை செய்யும் பொழுது நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது. புத்தியும், மனதும் ஒன்றாக எப்பொழுது இயங்குகிறதோ நாம் ஞானம் அடைகிறோம். ஞானி என்றால் என்ன? ஞானி என்றால் மனதும், புத்தியும் ஒரே முடிவை எடுப்பவர்களுக்கு ஞானி என்று பெயர். ஞானிகளுக்கு இந்தக் குழப்பம் வராது.
கமலஹாசன் நடித்த இந்தியன் என்ற திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு சிறிய உதாரணம். அந்தத் திரைப்படத்தில் இந்தியன் தாத்தா தனது மகன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக அவரைக் கொலை செய்வதற்காக துரத்தி வருகிறார்.
அப்பொழுது இந்தியன் தாத்தாவின் மனைவி வீட்டில் இருக்கும்பொழுது அவரிடம் கேட்பார். மகன் எங்கே, அந்தப் பாட்டிக்குத் தன் மகன் எனக்கே இருக்கிறான் என்று தெரிந்தும், தெரியாது என்று பொய் சொல்லுவார். அப்பொழுது அந்தத் தாத்தா உனக்குப் பொய் சொல்லத் தெரியாது உண்மையைச் சொல் என்று கேட்பார். அதற்கு அந்தப் பாட்டி என் புத்திக்குப் புரிகிறது, ஆனால் மனசு கேட்கமாட்டேன் என்கிறது என்று கூறுவார். அதற்கு இந்தியன் தாத்தா எனக்கு மனசும், புத்தியும் ஒன்றுதான் என்று கூறுவார். இந்த இடத்தை புரிந்து கொண்டால் நாம் மனதையும், புத்தியையும் ஒன்றாக்குவது மிகமிக சுலபம். மனதையும், புத்தியையும் ஒன்று சேர்த்து ஒரே விஷயத்தில் கவனிக்க வைப்பதற்கும், ஒரே முடிவை எடுக்க வைப்பதற்கும் நமக்குச் சில வழிமுறைகள் உள்ளன. அதை கற்றுக் கொள்வது மூலமாக நாம் ஞானியாகலாம்.
சில வீடுகளில் சில குழந்தைகள் நன்றாக விளையாடும். மனதிற்குப் பிடித்தவாறு சந்தோஷமாக இருக்கும் இந்தக் குழந்தைகள் லூட்டி அடிக்கும் குழந்தைகள் என்று கூறுவார்கள். இந்தக் குழந்தைகள் வீட்டிலுள்ள அனைத்து பொருளையும் உடைக்கும். ஒரு காரியத்தை மனதிற்குப் பிடித்தால் மட்டுமே செய்யும் மனதிற்குப் பிடிக்கவில்லைஎன்றால் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அதை செய்யாது இப்படி சிறு வயதிலிருந்து மனதிற்கு பிடித்த மாதிரியே வாழ்ந்த ஒரு குழந்தை புத்திசாலித்தனத்தை அதிகமாகப் பயன்படுத்தாது. எனவே இதனால் மற்றவர்களுக்கு அதிகமாகத் துன்பம் ஏற்படும் அதே சமயத்தில் அந்தக் குழந்தையைப் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும். ஏனென்றால் மனதுக்கு பிடித்த மாதிரி எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும். இப்படி நம் வீட்டில் சில குழந்தைகளைச் செல்லமாக நாம் வளர்த்துவதுண்டு. இந்தக் குழந்தைகள் மனத்திற்கு பிடித்த விஷயத்தை மட்டுமே செய்யும். ஆனால் புத்தியைப் பயன்படுத்தாமல் நல்லது, கெட்டது பற்றி என்றும் யோசிக்காது.
இப்படிச் சிறு வயதிலிருந்து வளர்ந்த ஒரு குழந்தை ஏதாவது ஒரு வயதில் குறிப்பிட்ட ஒரு நாளில் மனதிற்குப் பிடித்தாற்போல வாழ்ந்ததால் வாழ்க்கையில் ஒரு இடத்திற்கு மேல் நகர முடியாமல் புத்தியைப் பயன்படுத்தாமல் ஒரு இடத்தில் நன்றாக வாழ்க்கையில் அடிபட வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் அந்தக் குழந்தை(குழந்தை என்றால் வயது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்) வாழ்க்கையின் ஒரு இடத்தில் அடிபடும் பொழுது வாழ்க்கையே வெறுத்து இனிமேல் நாம் நம் மனதிற்குப் பிடித்தவாறு வாழக்கூடாது, புத்திசாலிதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கும். இப்படி முடிவெடுத்து அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் புதிய ஒரு பரிணாமத்தில் புத்திசாலியாக வாழ ஆரம்பிக்கும். ஆனால் மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்யாது, இப்படி வாழும் குழந்தைகளை அதாவது பெரியவர்களை நாம் பார்க்கும் பொழுது அவர்கள் நன்றாக வசதியாக இருப்பார்கள். அருமையாகத் தொழில் செய்வார்கள், காசு, பணம் புகழ் இது போன்ற பல விஷயங்களில் சாதித்திருப்பார்கள். ஆனால் மனத்திற்குப் பிடித்த விஷயங்களைச் செய்யாமல் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். இவர்களை நல்ல புத்திசாலி என்று அனைவரும் பாராட்டுவார்கள். ஆனால் மனசாட்சி இல்லாதவர் என்று குறை கூறுவார்கள். இப்படி உலக மனிதர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
இரண்டாவது வகை மனிதர்கள் பிறந்தது முதல் புத்திசாலியாக இருப்பார்கள். ஒரு சில வீடுகளில் உள்ள குழந்தைகள் லூட்டி அடிக்காது நன்றாக சமத்தாகப் படிக்கும். சொன்னால் கேட்டுக் கொள்ளும் எந்தப் பொருளையும் உடைக்காது. ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லும். நல்ல மதிப்பெண் எடுக்கும், யார் என்ன சொன்னாலும் தலையாட்டி விட்டு புத்திசாலியாக இருக்கும் இந்தக் குழந்தைகளைப் பெற்றோகள் என் மகன், என் மகள் நல்ல புத்திசாலி சமத்தான பெண் என்று கூறுவார்கள். ஆனால் அந்தக் குழந்தைகளின் மனதுக்கு பிடித்தமாதிரி எந்தக் காரியத்தையும் அது செய்யாமல் புத்திசாலி என்ற பெயர் வாங்கிக் கொண்டே பல வருடங்களாக வாழும் பொழுது பல விஷயங்களைச் சிறு வயதிலிருந்து ஏற்றுக் கொண்டு வாழ்வதால் ஒரு குறிப்பிட்ட வயதில் நாம் புத்திசாலியாக இருந்ததால் தான் நம் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டோம் இனிமேல் நான் புத்திசாலியாக இருக்க மாட்டேன், நான் என மனதிற்குப்பிடித்தார் போல வாழப் போகிறேன் என்று ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அந்தக் குழந்தை தன் மொத்த தன்மையை மாற்றி புத்திசாலிதனத்தைக் கைவிட்டு விட்டு மனதிற்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பித்துவிடும்.
இப்படி உள்ள பல பேரை மற்றவர்கள் இவர் ரொம்ப நல்லவர், தங்கமானவர், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர், இவரால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று பெருமையாகப் பேசுவார்கள் ஆனால் இவர் பிழைக்கத் தெரியாதவர் என்று குறை கூறுவார்கள் இப்படி உலகில் உள்ள எந்த மனிதரையும் தரம் பிரித்தால் ஒன்று பிழைக்க தெரிந்தவர் மனசாட்சி இல்லாதவர் அல்லது நல்லவர் பிழைக்கத் தெரியாதவர் என்று இரண்டு வகையாக மட்டுமே பிரிக்கலாம். இதில் நீங்கள் எந்த வகை என்பதை யோசித்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் மொத்தம் மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. மனதிற்குப் பிடித்தாற்போல வாழ்பவர்கள், புத்தியைப் பற்றி கவலைப்படாதவர்கள்.
2. புத்திசாலித்தனத்தை மட்டுமே நம்பி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்பவர்கள்.
3. மனசாட்சியோடு புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துபவர்கள்.
இதில் நீங்கள் எந்த வகை என்பதை யோசித்துப் பாருங்கள். இதில் மூன்றாவது வகை மனிதர்களே ஞானிகள் எனவே கண்டிப்பாக, பொதுவாக அனைவரும் முதல் இரண்டு வகையில் மட்டுமே வருவோம். இந்த முதல் 2 வகையில் எந்த வகையை சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் நிம்மதி, அமைதி, சந்தோஷம் இருக்காது. ஆனால் எப்பொழுதும் கவலை, கோபம், பயம், டென்ஷன் ஆகியவை நிறையாக நன்றாகவே இருக்கும். இதற்குக் காரணம் மனதிற்கும், புத்திக்கும் உள்ள சண்டைதான்.
ஒரு மனிதனின் மனக் குழப்பத்திற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒன்று, ஏற்கனவே நடந்த விஷயத்தை நாம் தவறாக செய்து விட்டோம், சரியாக செய்யவில்லை. இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம், சே ! தப்பு செய்து விட்டோமே! என்று கவலைப்படுவோம். இல்லை நாம் எடுத்த தவறான முடிவுக்காக பலர் மீது கோபப்படுவோம் அல்லது பலரைப் பார்த்து பயம் வரும். எனவே இனிமேல் நம் வாழ்க்கையில் நடக்க போகும் விஷயத்தைப் பற்றியும் பயம் வரும். இதற்குக் காரணம் நான் எடுத்த தவறான முடிவுகளே.
எனவே கடந்த வாழ்க்கையில் நாம் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரி என்று ஒரு வேளை இருந்தால் நீங்கள் இப்பொழுது அமைதியாக, சந்தோஷமாக ஆனந்தமாக இருப்பீர்கள் இல்லையா? எனவே நாம் எடுத்த முடிவுகளனைத்தும் சரி என்று எப்பொழுது வாழ்கிறோமோ, சரியாக இருக்கிறதோ கடந்த கால வாழ்க்கையைப் பற்றிக் கவலையும் இல்லாமல், வருங்கால வாழ்க்கையைப் பயமும் இல்லாமல் இந்த நிமிஷத்தில் நாம் அமைதியாக நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடியும்.
எனவே இனிமேல் நாம் ஒவ்வொரு முடிவும் எடுக்கும்பொழுதும் அனைத்து முடிவுகளையும் மனதிற்குப் பிடித்தாற்போல் எடுக்காமல் அனைத்து முடிவுகளையும் நல்லது அல்லது லாபம் தரக்கூடியது என்று புத்திக்குப் பிடித்த முடிவை மட்டுமே எடுக்காமல் இரண்டிற்கும், இரண்டு முடிவுகளில் இருந்தும் வெளியே வந்து ஞான புத்தியோடு யோசித்து இந்தச் சமயம், இந்த நாளில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் மனதின் பக்கம் மனசாட்சிப்படி நடக்க வேண்டுமா? அல்லது புத்திசாலித்தனமாக நடக்க வேண்டுமா? என்று யோசித்து ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அதன் படி நடக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட முடிவு எடுக்கும் பொழுது புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டுமென்றால் நம் மனதைப் புத்தி கொண்டு சமாதானப்படுத்தி அதைப் பிடித்த முடிவாக மற்ற வேண்டும். ஒரு வேளை, மனசாட்சிபடி முடிவு எடுக்க வேண்டுமென்றால் நம் புத்தியை மனது கொண்டு சமாதானப்படுத்தி இது இப்பொழுது நல்ல முடிவு என்று புத்தியைச் சமாதானப்படுத்த வேண்டும். இப்படி நம் வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் மனதையும், புத்தியையும் சமாதானப்படுத்தி ஒரே நேர்கோட்டில் இரண்டையும் ஒன்றாக வைத்து கொள்ளும்பொழுது நம் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி என்றுமே கவலைப்பட மாட்டோம். வருங்காலத்தை எண்ணியும் பயப்படமாட்டோம். எனவே நிம்மதியாக வாழலாம். இதற்கு ஞானப்புத்தி என்று பெயர்.
ஒவ்வொரு முடிவும் எடுக்கும் பொழுது எப்படி நாம் முடிவெடுக்க வேண்டும்? என்று பலருக்குக் குழப்பம் இருக்கும். எப்பொழுதுமே நாம் எடுக்கும் முடிவு முடிந்தவரை மனதிற்குப் பிடித்த முடிவாக இருக்கும் பொழுது நாம் நிம்மதியாக வாழ முடியும். அதே சமயத்தில் மனதிற்குப் பிடித்த மாதிரி வாழ வேண்டுமென்றால் அவரவர் இஷ்டத்திற்கு வாழ இந்த உலகத்தில் முடியாது. அது தவறான ஒரு வால்க்கைக்கைக்கு வலி வகுத்துவிடும். மனதிற்கு பிடித்தது போலவும் இருக்க வேண்டும். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. அந்த முடிவால் யாருடைய மனதிற்கும், உடலுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது. இதை ஞாபகம் வைத்துக் கொண்டு நாம் முடிவெடுத்தால் அந்த முடிவு என்றென்றும் சரியான முடிவாக மட்டுமே இருக்கும். எனவே ஒவ்வொரு முறை நம் மனது குழப்பத்தில் இருக்கும்பொழுது மனதிற்குப் பிடித்த முடிவு புத்திக்குப் பிடித்த நல்ல முடிவு. என்று இரண்டையும் விட்டு வெளியே வந்து ஆலோசனை செய்து இந்த 2 முடிவுகளில் எந்த முடிவு எடுத்தால் இந்த சமயத்தில் நல்லது நமக்கு பிடித்தது மேலும் அடுத்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை மனதில் கொண்டு எடுக்கும் பொழுது அந்த முடிவு சரியான முடிவாக இருக்கும்.
ஆனால் நம்மில் பலர் எப்பொழுது முடிவெடுத்தாலும் எந்த முடிவில் அதிக இலாபம் இருக்கும்? நமக்குச் சாதகமாக இருக்கும் என்பதைப் பற்றி மட்டுமே யோசிக்கிறோம்? பிறருடைய மனதும், உடலும் பாதிக்கும் என்பதை யாருமே கவலைப்படுவது கிடையாது. இப்படி நாம் அடுத்தவர்களின் மனதை பாதித்து எடுக்கும் முடிவுகளால் அவர்கள் நம்மை சபிக்கும்பொழுது அந்தச் சாபம் நமக்கும், நம் வாழ்க்கைக்கும் இடையூராக இருக்கும். எண்ணம் தான் வாழ்க்கை. நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று பலர் எண்ணினால் அந்த எண்ணம் நம்மை வாழ வைக்கும்.
நாம் நன்றாக இருக்கக் கூடாது என்று பலர் எண்ணினால் நமது வாழ்க்கை நன்றாக இருக்காது.
பல அரசியல்வாதிகள் பல கொலைகளை, கொள்ளைகளைப் பலருடைய வாழ்க்கையை வீண் செய்து ஆட்சியைப் பிடிப்பதற்காக பல தவறான வழிகளைப் பயன்படுத்தியும், பல வருடங்களாக அவர்கள் நன்றாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம், அவர்களால் நாட்டின் பல நபர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் பாதிக்கப்பட்ட நபர்களை விட நன்றாபா இருக்கும் நபர்கள் அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நம் பிழைப்புக் கேடுவிடுமே என்ற எண்ணத்தில் அவர் நன்றாக இருக்க வேண்டுமென்று வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே பலரும் வேகமாக முன்னேறி திடீரென பாதாளத்தில் சரிவதற்குக் காரணம், மற்றவர்கள் மனதை மற்றும் உடலைப் பாதிப்பதால் ஏற்படும் முன்னேற்றமே. எனவே தயவு செய்தி வியாபாரத்தில் மற்றும் குடும்பத்தில் மற்றும் எல்லா இடங்களிலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் முடிந்தவரை மனதிற்குப் பிடித்தமான முடிவும், நல்லதுமாக இருக்குமாறும் அடுத்தவர்கள் மனதையும் உடலையும் பாதிக்காதவாறு எடுக்க வேண்டும் இப்படி எடுத்து நம் வாழ்க்கையில் வாழ்ந்தால் நமது முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருக்கும். ஆனால் கீழே விழவே மாட்டோம். போகப்போக நமது முன்னேற்றம் பல மடங்கு அதிகரித்து மிகப்பெரிய அளவில் நமது உடல், மனம், புத்தி, பொருளாதாராம் அனைத்தும் அதிகரிக்கும்.
சில சாமியார்கள் 120 நாடுகளில் ஆசிரமங்களை வைத்துப் பல கோடி மக்களுக்கு பல பயிற்சிகளைக் கொடுத்து பல கோடி ரூபாய்களைக் கணக்குப் பார்த்து தினமும் பலவிதமான மிரட்டல்களையும், பிரச்சனைகளையும் சமாளித்து ஒவ்வொரு வினாடியும் அமைதியாக,நிம்மதியாக ஏதாவதொரு கூட்டத்தில் மைக்கின் முன்னாள் அமர்ந்து வெட்டியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களே! இதற்குக் காரணம் என்னவென்றால் இவர்கள் ஞானபுத்தியை பயன்படுத்தி எடுக்கும் முடிவு தான்.
சிறிய ஒரு கம்பனியை வைத்து பத்து நபர்களை வேளைக்கு வைத்திருக்கும் நாமே கம்பெனியின் வேலை கெட்டுப்போனால் தலையை பிய்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். அப்படி இருக்கையில் சில குருநாதர்களால் ஒவ்வொரு நாட்டு ஆசிரமத்திலும், எத்தனையோ கேசுகள், எத்தனையோ வங்கிக் கணக்குகள், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளித்தும் அவர்களால் எப்படி நிம்மதியாக, அமைதியாக எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க முடிகிறதென்றால் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு வினாடி மட்டுமே அல்லது ஒரு நிமிடம் மட்டுமே செலவு செய்வார்கள். மிகப்பெரிய முடிவுகளுக்கு சரியான முடிவு எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்ட பிறகு நாம் பல வருடங்களாக யோசித்து முடிவு எடுக்க முடியாத பல முடிவுகளை அவர்கள் ஒரு வினாடியில் எடுத்துவிட்டு மீதமுள்ள நேரங்களில் சும்மா இருப்பார்கள். ஆனால் நம்மில் பலர் சிறிய சிறிய பிரச்சினைகளுக்குப் பல வருடங்களாக மண்டையை உடைத்து இன்னமும் முடிவு எடுக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒரே விஷயத்தை நம் மனம் நினைத்துக் கொண்டு குழப்பத்தில் இருக்கும்பொழுது நமக்கு நிம்மதியும், அமைதியும் கிடைப்பதில்லை. எனவே இனிமேல் முடிவெடுப்பது எப்படி என்பதை ஞான புத்தியைக் கொண்டு புரிந்து கொண்டால் இனி நாமும் சும்மா இருப்போம். இப்படிச் சும்மா இருந்தால் நீங்களும் ஞானியாகலாம்.
ஆரம்பத்தில் இது சற்றுக் கடினமாக இருக்கும். ஆனால் புரிந்துகொண்டு பயன்படுத்தினால் இன்று முதல் ஒரு 3 மாதம் அல்லது 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவாவது நாம் ஞாநியாகி விடலாம். ஆரம்பத்தில் சிறுசிறு முடிவுகளை ஒரு காகிதம் எடுத்து எழுதிப் பழகுங்கள். நம் மனதிற்குப் பிடித்த முடிவு எது ? புத்திக்குப் பிடித்த முடிவு எது ? இந்த இரண்டு முடிவுகளால் வரும் விளைவுகள் என்ன? இதில் யார் யார் பார்க்கப்படுவார்கள்? என்ன இலாபம், நஷ்டம்? எது பிடிக்கும்? பிடிக்காது? என்பதை எழுதி வைத்து அந்தத் தாளைக் கையில் வைத்து இதில் சரியான முடிவு எது என்பதை யோசித்து முடிவெடுத்துப் பழகினால் போகப்போக இனிமேல் நாம் மனதிலேயே இந்த முடிவை எடுக்க முடியும்.
எனவே தான் வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் ஒரு சங்கல்பத்தை அனைவரும் தினமும் கூற வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார். " நான் என் வாழ்நாளில் யாருடைய மனதிற்கும், உடலிற்கும் எந்தத் துன்பத்தையும் தரமாட்டேன். துன்பப்படுபவர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்" என்று வேதாத்திரி மகரிஷி ஐயாவை பின்பற்றும் நபர்கள் அடிக்கடி மூன்று முறை கூறிக் கொள்வார்கள். எனவே நாமும் தினமும் இந்த சங்கல்பத்தை தினமும் மூன்று முறை கூறுவோம்.
Category: தமிழ் மருத்துவம்