பட்டுப்போன்ற கூந்தல் தரும் விளாம்பழம்
வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் – 100 கிராம், சீயக்காய், வெந்தயம் – தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.
தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப் புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும். மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
Category: அழகு குறிப்புகள், பழமும் பலனும்