சீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)

சீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)

ஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள்.

பெரிய மரங்களைப் பற்றிப் படரக்கூடிய இந்த சீந்தில் கொடி, வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. Tinospora cordifolia என்பது சீந்திலின் தாவரப் பெயர். Menispermaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள்.

இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது.
வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி. சீந்தில் கொடித் தீநீர் வாத சுரத்தையும், பித்த சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்தக்கூடியது.

ஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.

‘மேகமெனு மாதபத்தால் வெந்த வுயிர்ப்பயிரைத்
தாக மடங்கத் தணித்தலால் – ஆகம்
அமர ரெனலிருக்க வாதரித்த லாலே
அமுதவல்லி சஞ்சீவி யாம்.’ – என்கிறது
சித்தர் பாடலான தேரன் வெண்பா.

நீரிழிவு என்றும் மதுமேகம் என்றும் சொல்லப்படுகிற சர்க்கரை நோயால் ஏற்பட்ட வாட்டத்தை வெயிலால் வெந்து வாடிய பயிரை உயிர் கொடுத்துக் காத்த மழைபோல போக்கக் கூடியது சீந்தில். நாவறட்சியையும் உடற்சூட்டையும் போக்கக் கூடியது, ஆரோக்கியமுடன் வாழவும் தீராத நோய்களை தீர்த்து வைக்கவும் உதவக்கூடிய சஞ்சீவி மூலிகை சீந்தில் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும்.

மேலும் இன்னொரு பாடலில்,
‘அமுதவல் லிக்கொடி யக்கார முண்டிடத்
திமிருறு மேகநோய்த் தீபெலா மாறுமே.’
– என்றும் குறிப்பிட்டிருக்கிறார் தேரையர்.

அமிர்தவல்லி எனும் சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை உண்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது போன்ற சின்ன பிரச்னைகள் முதல் பால்வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை விடுதலை கிடைக்கும். இன்னொரு பாடலில் சீந்தில் கொடியின் சர்க்கரையால் பதினெட்டு வகையான சரும நோய்களை போக்க முடியும் என்கிறார்.

சீந்தில் மருந்தாகிப் பயன்தரும் விதம்

சீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

சீந்தில் தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.

சீந்தில் சர்க்கரை தயார் செய்யும் விதம்:
சீந்தில் கொடியை இடித்து குளிர்ந்த நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும்.

இந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். தாய்ப்பாலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.

எந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்!

சீந்தில் சர்க்கரை தேவைக்கு:
K7 Herbo Care
S.S.Colony North Gate,
Madurai-625020.
Cell & Whatsapp: +91-9025047147
Cell 2: +91-9025047147

Category: தமிழ் மருத்துவம்

Tags: , , , ,

- March 10, 2018

Leave a Reply

Your email address will not be published / Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.