கொரோனா வைரஸ்: கபசுர குடிநீர் என்பது என்ன?அது கொரோனாவை குணப்படுத்துமா?
கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். உண்மையில் கபசுர குடிநீர் என்பது என்ன, அது கொரோனாவை குணப்படுத்துமா, மாற்று மருத்துவ முறைகளில் கொரோனாவுக்கு தீர்வு இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து மூத்த சித்த மருத்துவர்களில் ஒருவரான கு. சிவராமன், பிபிசியின் செய்தியாளரான முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து.
கபசுர குடிநீரை இங்கே க்ளிக் செய்து வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலும் வாங்கலாம்.
கே. கபசுர குடிநீர் கொரோனாவைக் குணப்படுத்துமா?
ப. கொரோனாவைக் கட்டுப்படுத்தக்கூடிய, கொரோனாவைத் தடுக்கக்கூடிய மருந்து என ஒரு முழுமையான மருந்து எந்த மருத்துவத்திலும் கிடையாது. மார்ச் மாதத் துவக்கத்திலேயே ஆயுஷ் துறையானது இந்தியாவில் இந்தத் தொற்று பெரிதாகப் பரவினால் என்ன செய்வது என்பது குறித்து மாற்று மருத்துவ முறை நிபுணர்களுடன் விவாதித்து, விதிமுறைகளை உருவாக்கியது. எந்த மருத்துவத்திலும் கொரோனாவுக்கு மருத்துவம் இல்லாத நிலையில், சித்தமருத்துவத்தைப் பொறுத்தவரை நாங்கள் சில ஆலோசனைகளைத் தந்தோம். கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், ஆடாதொடை மணப்பாகு ஆகியவற்றை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
இதை எப்படித் தேர்ந்தெடுத்தோம் என்றால், இந்த கோவிட் – 19ன், மருத்துவ ரீதியான அறிகுறிகளை முதலில் பட்டியலிட்டோம். காய்ச்சல், நெஞ்சில் சளி சேருவது, மூச்சு இரைப்பு போன்ற நிமோனியா நோய்க்கான அறிகுறிகள்தான் இந்நோய்க்கும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. அதே அறிகுறிகளைக் கொண்ட பழைய நோய்களுக்கு நாங்கள் மருந்துகளைக் கொடுத்திருக்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, நிமோனியா போன்ற மரணம் வரை கொண்டுசெல்லக்கூடிய காய்ச்சல்களுக்கான முக்கியமான சித்த மருந்து கபசுர குடிநீர்.
கொரோனாவுக்கு மருந்து ஆங்கில மருத்துவத்திலும் கிடையாது. அவர்கள் எப்படி இந்நோய்க்கு சிகிச்சையளிக்கிறார்கள்? re – purposing of old molecules என்ற முறையில் ஏற்கனவே பல நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளைக் கொடுக்கிறார்கள். எச்ஐவிக்குக் கொடுக்கப்பட்ட மருந்திலிருந்து இரண்டு மூலக்கூறுகள், குளோரோகுயின் சல்ஃபேட் என மலேரியாவுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்திலிருந்து சில மூலக்கூறுகள், நுரையீரல் சார்ந்த தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு எதிர் நுண்ணுயிரி – அசித்ரோமைசின் ஆகிய மருந்துகள்தான் இப்போது இந்த நோய்க்குக் கொடுக்கப்படுகின்றன. இவை வேறு நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டவை. ஆனால், இப்போது இந்த நோய்க்குக் கொடுக்கப்படுகிறது.
இதோபோல சித்த மருத்துவத்தில் re – purposing செய்வதற்கு நிமோனியா போன்ற பழைய நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட கபசுர குடிநீர் என்பதுதான் சரியான மருந்தாக இருந்தது. இந்த மருந்தில் 15 மூலிகைகள் இருக்கின்றன. இவை, சளி, மூச்சு இரைப்பு, காய்ச்சல், தொண்டைவலி ஆகியவற்றைக் குறைக்கக்கூடிய மூலிகைகள். ஆகவேதான் இந்த மருந்தை கொடுக்கலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்தோம்.
தவிர, இந்த மருந்து வைரஸ்களைக் குறைப்பதில் எப்படிச் செயல்படுகிறது என்ற ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டுமென மத்திய அரசையும் கோரியிருக்கிறோம்.
கே. இந்த கபசுர குடிநீர் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோராலும் குடிக்கக்கூடியதா?
ப. இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். கபசுர குடிநீர் இந்த நோய்க்குப் பயன்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியான உடனேயே மக்கள் இப்போது உள்ள பதற்ற நிலையில், நானும் ஒரு டம்ளர் குடித்து வைத்துவிட்டால் எனக்கும் இந்த நோய் வராதுதானே என்ற எண்ணத்தில் ஊரடங்கை மீறி வெளியில் வர ஆரம்பித்தார்கள். கடைகளிலும் மருத்துவமனையிலும் நிற்க ஆரம்பித்தார்கள். ஒரு ஆங்கில மருந்தை வாங்கிச் சாப்பிடுவதில் உள்ள பயம், ஆங்கில மருந்தை வாங்கிச் சாப்பிடுவதில் இருக்காது. இதனால், ஊரடங்கை மறுத்து அந்த மருந்தை வாங்க ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான் நாங்கள், இப்போதைய தேவை ஊரடங்குதான். அதைத்தான் பின்பற்ற வேண்டுமெனச் சொன்னோம். அப்போதுதான் சமூகரீதியாக பரவுவதை தடுக்க முடியும் என்று விளக்கினோம். யார் இந்த நோயால் பாதிக்கப்படக்கூடிய பிரிவில் அதாவது, ஏற்கனவே மூச்சு இரைப்பு உடையவர்கள் போன்ற பிரிவினருக்கு அரசே இதனை வாங்கிக் கொடுக்கட்டும் என்று சொன்னோம்.
இரண்டாவதாக, இம்மாதிரியான ஒரு பதற்ற சூழலில் இந்த மருந்திற்கு இருக்கும் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு, யாரோ சிலர் ஏதோ சில மூலிகைகளைப் பயன்படுத்தி கபசுர குடிநீர் என்ற பெயரில் விற்றால், அதை வாங்கி அருந்தி ஏதாவது பிரச்சனையாகிவிட்டால் கபசுர குடிநீரால்தான் அந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்று சொல்லிவிடக்கூடும். அது அந்த மருந்தில் இருந்த தவறாகப் பார்க்கப்படாமல், மருத்துவத்தின் தவறாகப் பார்க்கப்படும்.
ஆகவே, அரசுதான் தேவையான மக்களுக்கு இந்தக் குடிநீரைப் பரிந்துரைக்க வேண்டும்.
நன்றி : பிபிசி
கபசுர குடிநீரை இங்கே க்ளிக் செய்து வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலும் வாங்கலாம்.
Category: தமிழ் மருத்துவம்